Home தலையங்கம் தமிழர்களின் பண்பாட்டுக்கு வலுசேர்க்கும் புள்ளிவிவரம்

தமிழர்களின் பண்பாட்டுக்கு வலுசேர்க்கும் புள்ளிவிவரம்

33
0
SHARE

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இனம், மதம், மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்து வாழக்கூடிய மெட்ரோ நகரமாகும். தமிழகத்தின் தலைநகர் என்ற சிறப்பிடம் பெற்றுள்ள சென்னையில் மக்கள் செரிவு அதிகம். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வேலைக்காக இங்குதான் வந்து குழுமி இருக்கின்றனர். இதனால் சென்னையில் வேலை நேரங்களில் மிகவும பிசியாக காணப்படும். ஆண்கள், பெண்கள் என்று பள்ளிக்கும், வேலைக்கும் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். பணிக்கு செல்லும் பெண்கள் இரவிலும் இவ்வாறு திரும்பி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இரவு நேரம் என்றாலே சிலர் குடித்துவிட்டு கலாட்டா செய்வது வழக்கம். ஆனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையால் என்னென்ன நடக்கும் என்பதை சென்னை வாசிகள் புரிந்து வைத்துள்ளனர். இதனால் இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பெரும்பாலும் தொல்லை கொடுப்பது கிடையாது. இளைஞர்கள் கூட பெரிய அளவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது கிடையாது.

இதற்கிடையில் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவர பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 43 லட்சம் பேர் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 ஆக குறைந்துள்ளது. ஒரு லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னையை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன. பெங்களூரு 5வது இடத்தில் உள்ளது. அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்ததுபோல் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்ததில்லை. அதற்கான சாத்தியங்களும் மிகக்குறைவே. நள்ளிரவிலும் கூட சுதந்திரமாக பெண்கள் வெளியே உலாவுகின்றனர். சென்னையைப் போல் வேறெந்த நகரத்திலும் தங்களுக்கு இப்படியரு பாதுகாப்பு உணர்வு கிடைத்ததில்லை என பல பெண்கள் தங்கள் வாழ்வு அனுபவத்தில் இருந்து கூறுகின்றனர். நம் தமிழ் பண்பாட்டு மதிப்பீடுகளும் இதற்கு வலு சேர்க்கிறது.

பெண்களை உயர்வாகக் கருதுவது தமிழ் பண்பாட்டிலேயே இருக்கிறது. இதுபற்றி வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கையில், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம். இரவு 9 மணிக்கு மேல் வேலை நேரம் முடிந்தாலும் அச்சமின்றி பேருந்தில் வந்து தங்கியிருக்கும் இடத்திற்கு நடந்தே வருவோம். நாங்கள் பெண்கள் என்பதால் எங்களை வேறுமாதிரி பார்வைகளை வீசுவார்களே தவிர மற்றபடி அருகில் வந்து தொல்லை கொடுக்கமாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெண்களும் கலந்துகொண்டனர். அப்போது பெண்களுக் கு எதிராக எந்தவித குற்றச் செயலும் நடக்கவில்லை. சென்னை மெரினாவில் இரவு நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் இருந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், நாட்டின் தலைநகரமான டெல்லி நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அல்ல. அங்கு பாலியல் பலாத்காரம், ஈவ்டீசிங் அடிக்கடி நடக்கிறது. வர்த்தக நகரமான மும்பையிலும் அதே நிலைதான். இந்தியாவின் இன்டர்நெட் நகரம் என்று  அழைக்கப்படும் பெங்களூருவில், புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வீடியோ ஆதாரங்கள் வைரலானது.

நாட்டில் பெரும்பாலான நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் உள்ளது என்ற புள்ளி விவரம் மேலும் இங்குள்ள இளைஞர்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவே கருதப்படுகிறது.