Home அரசியல் ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் கோவை எம்.எல்.ஏ. பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் கோவை எம்.எல்.ஏ. பேட்டி

23
0
SHARE

கோவை, ஆக. 26& ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோவை எம்.எல்.ஏ பேட்டி அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி சரியில்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை வாங்கி உள்ளார். இதே போல மாபா பாண்டியராஜனும் பதவி வாங்கி கொண்டார்.

இவர்களால் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ போன்ற பல மாவட்ட செயலாளர்கள் பதவியை இழந்துள்ளனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு காரணமே இந்த ஓ.பன்னீர்செல்வம் தான். அவரை மீண்டும் இணைப்பதற்கு எந்த எம்.எல்.ஏ.க்களின் கருத்தையும் கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மரியாதை போய் விட்டது. பதவிக்காக தான் இதையெல்லாம் அவர் செய்கிறார்.

நிர்வாகிகளை அழைத்து இதுவரை அவர் எந்த கூட்டமும் போடவில்லை. எடப்பாடி அணியினர் சிறிது நாட்களுக்கு முன்பு வரை ஓ.பன்னீர் செல்வத்தை மோசம் என்றார்கள். தற்போது ஓ.பி.எஸ்., எடப்பாடியும் ஒரே மாலைக்குள் நின்று கொண¢டு சிரிக்கிறார்கள். எனவே இருவரையும் நம்ப முடியவில்லை. இன்று எடப்பாடி, தினகரனை மோசம் என்கிறார்.

நாளையே இவர்கள் இருவரும் ஒன்று சேர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? என்னை பொறுத்தவரை இருவரும் வேண்டாம். ஆனால் ஆட்சி இருக்க வேண்டும். தினகரன் அணி சார்பில் என்னையும் அவர்களது அணிக்கு அழைத்தனர். ஆனால் நான் செல்ல வில்லை. ஓ.பி.எஸ் 10 எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்ற போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைத்தீர்கள்.

அதேபோல தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர் அணியை சேர்ந்தவர்களுக்கும் மந்திரி பதவிகள் கொடுக்க வேண்டும். நான் யாருடைய அணியிலும் இல்லை. நடுநிலைமை வாதியாக இருக்கிறேன். வருகிற 28ம் தேதி அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விடலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.

கட்சியில் பதவி சண்டை நடந்து வருகிறது. தற்போது உள்ள ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் யார் நல்லவர்கள் என்று தெரியும். தமிழக ஆளுநரை மத்திய அரசு நியமித்துள்ளது. எனவே அவர் மத்திய அரசு சொல்வதை தான் செய்வார். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்றார்.