Home சிறப்புச் செய்திகள் புத்தரா? கார்ல் மார்க்ஸா? பகுதி 2

புத்தரா? கார்ல் மார்க்ஸா? பகுதி 2

46
0
SHARE

மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருப்பது

புத்தரின் சித்தாந்தங்களையும் கார்ல்மார்க்ஸின் சித்தாந்தங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன், மார்க்ஸியத்தின் இந்த மூலக் கோட்பாடுகளில் எவ்வளவு இப்போது மிஞ்சியிருக்கிறது என்பதைக் காண்பது அவசியம், வரலாற்றின் மூலம் செல்லாதவை என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு, எதிர்ப்பாளர்களால் தவறானவை என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு என்று காணவேண்டும்.

மார்க்ஸியக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக, கார்ல்மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பின் பல பகுதிகள் உடைந்து நொறுங்கிப் போய்விட்டன.

அவரது சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸிய வாதம் முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி முதல்முதலாக 1917ல் ஒரு நாட்டில், சோஷலிசத்தின் வேதமானடாஸ் காப்பிட்டல்” (மூலதனம்) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் சென்றபின், அமைக்கப்பட்டது. ரஷ்யாவுக்குப் பொது உடைமை.

உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி என்பதன் மறு பெயர் இது வந்தபோது கூட, அது ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றாக, எந்த விதமான மனித முயற்சியும் இல்லாமல் வந்துவிடவில்லை. ரஷ்யாவில் அது காலடி வைப்பதற்கு முன் அங்கு ஒரு புரட்சி நடந்தது, மிகவும் கருத்தூன்றித் திட்டமிடப்பட்டது, பெருமளவில் வன்முறையும் ரத்தம் சிந்துதலும் நடந்தன.

உலகின் மீதிப்பகுதி, உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சியின் வருகைக்கு இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது. சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸியக் கருத்து இவ்வாறு பொதுவான முறையில் பொய்த்துப்போனது மட்டுமின்றி, பட்டியலில் கூறப்பட்டுள்ள மற்றக் கருத்துக்களில் பலவும் தர்க்கவாதத்தின் மூலமும் அனுபவத்தின் மூலமும் தகர்க்கப்பட்டுவிட்டன. வரலாற்றுக்குப் கூறுவதுதான் வரலாற்றுக்கு ஒரே விளக்கமாகும் என்பதை இப்போது யாரும் ஏற்பதில்லை. உழைப்பாளர்கள் படிப்படியாக வறுமையில் ஆழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று இப்போது யாரும் ஏற்பதில்லை. இதுவே மற்றக் கருத்துக்களுக்கும் பொருந்தும்.

மார்க்ஸியத்தில் இப்போது மீதியிருப்பது அணைந்துபோன நெருப்பின் மிச்சமே, இது அளவில் சிறியதானாலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த மிச்சத்தில் நான்கு அம்சங்கள் உள்ளன என்பது என் கருத்து.

(1) தத்துவ ஞானத்தின் பணி உலகை மறுமுறை சீரமைத்துக் காட்டுவதேயாகும். உலகின் தோற்றத்தை விளக்குவதில் காலத்தை வீணாக்குவதல்ல.

(2) ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே நலன்களில் முரண்பாடு உள்ளது.

(3) உடைமைகள் தனிநபர்களுக்குச் சொந்தமாயிருந்தால் ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், மற்றொரு வர்க்கத்துக்கு, அது சுரண்டப்படுவதன் மூலம் துன்பமும் ஏற்படுகின்றன.

(4) சமூகத்தின் நன்மைக்காக தனியார் உடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

புத்தர் கார்ல்மார்க்ஸ் ஒப்பீடு

மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருக்கும் அம்சங்களை எடுத்துக் கொண்டு புத்தரையும் கார்ல்மார்க்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

முதல் அம்சத்தில் புத்தருக்கும் கார்ல் மார்க்ஸக்கும் இடையே முழுமையான கருத்தொற்றுமை உள்ளது. இந்தக் கருத்தொற்றுமை எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுவதற்குப் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கீழே மேற்கோள் தருகிறேன்.

பின்னர், அதே விதமாக, போத்தபாதா (புத்தரிடம்) பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.

1. உலகம் நிரந்தரமானது அல்லவா?

2. உலகம் அளவுக்குட்பட்டதா?

3. உலகம் அளவற்றதா?

4. ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா?

5. ஆன்மா ஒன்றாகவும். உடல் வேறொன்றாகவும் உள்ளனவா?

6. உண்மையை அறிந்து கொண்ட ஒருவன் மரணத்துக்குப் பின் வாழ்கின்றானா?

7. அவன் மரணத்துக்குப் பின் மீண்டும் வாழ்வதும் இல்லை, வாழாமல் இருப்பதும் இல்லையா?

இந்த ஒவ்வொரு கேள்விக்கும் புத்தபிரான் ஒரே விடையே தந்தார் அந்த விடை இதுதான். “அதுவும் கூட, போத்தபாதா, நான் கருத்து எதுவும் தெரிவிக்காத விஷயம்”. “ஆனால் அதுபற்றி புத்தபிரான் ஏன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை”. ஏனென்றால்இந்தக் கேள்வி பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லை.

அது (தம்மதத்துடன்) சம்பந்தப்பட்டதல்ல, அது நன்னடத்தையின் அம்சங்களுடன் கூட ஒத்துப் போகக்கூடியதல்ல, பற்றின்மைக்கோ, காமத்திலிருந்து தூய்மை பெறுவதற்கோ, அமைதியாயிருப்பதற்கோ, இதயத்தை சாந்தப்படுத்துவதற்கோ, உண்மையான ஞானத்துக்கோ, (மார்க்கத்தின் உயர் நிலைகளைப் பற்றிய) அறிவைப் பெறுவதற்கோ, நிர்வாணத்துக்கோ அது உதவாது.” இரண்டாவது அம்சத்தில், புத்தருக்கும் கோசலத்தின் பசேனதி மன்னருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கீழே மேற்கோள் தருகிறேன்.

மேலும், மன்னர்களுக்கிடையிலும், பிரபுக்களுக்கிடையிலும் பிராமணர்களுக்கிடையிலும், இல்வாழ்வோருக்கிடையேயும், தாய்க்கும் மகனுக்குடையேயும், மகனுக்கும் தந்தைக்கு மிடையேயும், சகோதரனுக்கும் சகோதரிக்குமிடையேயும், தோழனுக்கும் தோழனுக்குமிடையேயும்..எப்போதும் போராட்டம் இருக்கிறது.”

இவை பசேனதியின் சொற்கள் என்றாலும், இவை சமூகத்தின் உண்மையான சித்திரத்தைத் தருகின்றன என்பதைப் புத்தர் மறுக்கவில்லை.

வர்க்க முரண்பாடு பற்றிய புத்தரின் கருத்தைப் பொறுத்தமட்டில், அவரது அஷ்டாங்க மார்க்கக் கொள்கை, (எண்வகைப் பாதை) வர்க்க முரண்பாடு இருக்கிறது என்றும், முரண்பாடுதான் துக்கத்துக்குக் காரணம் என்றும் ஒப்புக்கொள்கிறது.

மூன்றாவது அம்சத்தில், புத்தருக்கும் போத்தபாதாவுக்கும் இடையே நடந்த அதே உரையாடலிலிருந்து மேற்கோள் தருகிறேன்.

அப்படியானால் புத்தபிரான் முடிவு செய்திருப்பது என்ன?” “போத்தபாதா துன்பமும் துக்கமும் உள்ளன என்று நான் உரைத்திருக்கிறேன்

துக்கத்தின் காரணம் என்ன என்பதை நான் உரைத்திருக்கிறேன். துக்கத்திற்கு நிவாரணம் என்ன என்பதை நான் உரைத்திருக்கிறேன், துக்க நிவாரணத்தை அடைவதற்கு என்ன மார்க்கம் என்பதையும் நான் உரைத்திருக்கிறேன்”.

புத்தபிரான் இதைப்பற்றி எடுத்துரைத்திருப்பது ஏன்?” “ஏனென்றால், போத்தபாதா, அந்தக் கேள்வி பயன் விளைவிக்க கூடியதாக உள்ளது. அது தம்மத்துடன் தொடர்பு உள்ளது. நன்னடத்தைக்கும், பற்றின்மைக்கும், காமத்திலிருந்து தூய்மையடைதலுக்கும், அமைதியாயிருத்தலுக்கும் இதயத்தைச் சாந்தப்படுத்தலுக்கும், உண்மையான ஞானத்துக்கும், மார்க்கத்தின் உயர்நிலைகளைப்பற்றி அறிவதற்கும், நிர்வாணத்துக்கும் அது உதவுகிறது. அதனால்தான் போத்தபாதா அதைப் பற்றி நான் எடுத்துரைத்திருக்கிறேன்.”

அந்த மொழி வேறுபட்டதாக உள்ளது, அதனால் பொருள் ஒன்றே. துக்கம் என்பதற்குப் பதிலாக, சுரண்டல் என்று வைத்து வாசித்தால் புத்தர், மார்க்ஸிடமிருந்து விலகியிருக்கவில்லை. தனிநபர் உடைமை பற்றிய பிரச்சனையில் புத்தருக்கும் ஆனந்தாவுக்கும் இடையிலான உரையாடலில் பின்வரும் பகுதி மிகவும் பொருள் பொதிந்ததாக உள்ளது. ஆனந்தாவின் கேள்வி ஒன்றுக்குப் பதிரளித்துப் புத்தர் கூறினார்.

பேராசைக்குக் காரணம் உடைமை தான் என்று கூறியிருக்கிறேன். அது எப்படி என்பதை, ஆனந்தா, பின்வரும் முறையில் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும், எதற்கும் எந்தவிதமான உடைமையும் இல்லை என்றால், அப்போது எந்த உடைமையும் இல்லாமல் போவதால், இதனால் உடைமை அற்றுப்போகும் காரணத்தால், பேராசை தோன்றக்கூடுமா?”

தோன்றாது, பிரானே”.

காரணம் என்னவென்றால், ஆனந்தா, அதுதான் பேராசைக்கு, அடித்தளமாகவும், அடிப்படையாகவும், தோற்றுவாயாகவும் உள்ளது, அதாவது, உடைமை.

விடாப்பிடியான தன்மைதான் உடைமைக்குக் காரணம் என்று நான் கூறியிருக்கிறேன். அது எப்படி என்பதை, ஆனந்தா, பின்வரும் முறையில் புரிந்துகொள்ள வேண்டும். யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றினிடம் எந்த விதமான விடாப்பிடித் தன்மையும் கொண்டிராவிட்டால், அப்போது எந்த விடாப்பிடித் தன்மையும் இல்லாமல் போவதால், இதனால் விடாப்பிடித்தன்மை அற்றுப் போகும் காரணத்தால், உடைமை எதுவும் தோன்றக்கூடுமா?”

தோன்றாது, பிரானே

  காரணம் என்னவென்றால் ஆனந்தா, அதுதான் உடைமைக்கு அடித்தளமாகவும், அடிப்படையாகவும், தோற்றுவாயாகவும் உள்ளது, அதாவது விடாப்பிடித்தனம்”.

நான்காவது அம்சத்தில் சான்று எதுவும் தேவையில்லை, பிக்கு சங்கத்தின் விதிகளே இந்த விஷயத்தில் மிகச் சிறந்த சான்றாக உள்ளன.

விதிகளின்படி ஒரு பிக்கு பின் வரும் எட்டுப்பொருள்களை மட்டுமே தனி உடைமையாகக் கொண்டிருக்கலாம், இந்த எட்டுப் பொருள்களாவன.

1,2,3, தினசரிஉடுப்பதற்குமூன்றுஆடைகள்அல்லதுதுணிகள்

4. இடையில் கட்டுவதற்கு ஒரு பந்தனம்.

5. ஒரு பிச்சைப் பாத்திரம்.

6. ஒரு சவாரக்கத்தி.

7. ஒரு ஊசி.

8. தண்ணீர் வடிகட்டி.

மேலும் ஒரு பிக்கு தங்கத்தையே வெள்ளியையோ பெற்றுக் கொள்ளக் கூடாது என்று முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. தங்கத்தை அல்லது வெள்ளியைக் கொண்டு அவர் தமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எட்டுப் பொருள்களைத் தவிர வேறு எதையேனும் வாங்கி விடலாம் என்பதற்காக இந்தத் தடை.

இந்த விதிகள், ரஷ்யாவில் கம்யூனிசத்தில் உள்ளவற்றை விடமிகவும் கடுமையானவை.

தொடரும்