Home சம்பவம் மேட்டூரில் பரிதாப சம்பவம்: அண்ணன் & தம்பி உள்பட 4 பேர் தண்ணீரில்...

மேட்டூரில் பரிதாப சம்பவம்: அண்ணன் & தம்பி உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு

18
0
SHARE

மேட்டூர், டிச. 19& மேட்டூரில் பரிதாப சம்பவம் அண்ணன் & தம்பி உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி மகன் மோகன்ராஜ் (7), தனபால் மகன்கள் ராஜா (10), தமிழ் அழகன்(8) ஆகிய 4 பேரும் நேற்று மதியம் திடீரென மாயமானார்கள்.

இவர்கள் 4 பேரும் கேம்ப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதனால் அவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட சென்றிருக்கலாம் என நினைத்து பெற்றோர் பள்ளி வளாகத்தில் சென்று தேடினர். அங்கு 4 பேரும் இல்லை.

அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்தபோது, மணிகண்டன், மோகன்ராஜ், ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் இங்கு வரவில்லை என தெரிவித்தனர்.ஒரே நாளில் 4 மாணவர்கள் மாயமான சம்பவம் கேம்ப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. இன்று காலையில் மகன்கள் எப்படியும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார்கள் என நினைத்து பெற்றோர் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண்பாலம் வழியாக தண்ணீர் வழிந்தோடும் பாதையில் மாடி லைன் பின்புறம் உள்ள குட்டையில் இருந்த நீரில் மூழ்கி மாணவர்கள் மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகிய 4 பேரும் பிணமாக மிதந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கருமலைக் கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குட்டையில் இருந்து 4 பேர் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.