Home தலையங்கம் போலீஸ் வீட்டீலே மறையும் திருடனை பிடிக்க முடியுமா?

போலீஸ் வீட்டீலே மறையும் திருடனை பிடிக்க முடியுமா?

17
0
SHARE

இப்போது தமிழக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது தான் இந்த டெங்கு காய்ச்சல். இது வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. இதைப் பரப்பும் வேலையைச் கொசுவே செய்கிறது. டெங்கு வைரஸ் உடலுக்குள் பரவும்போது ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டுகளை அழிக்க ஆரம்பிக்கும். இந்த ரத்தத் தட்டுக்கள் அழிக்கப்பட்டால் உள்ளுறுப்புகளில் ரத்தம் கசிந்து மரணம் ஏற்படலாம்.

உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் இந்த கொடிய தொற்று நோய் தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு  சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெங்குவைஎடியஸ் எஜிப்டிவகைக் கொசுக்கள் பரப்புகின்றன. இந்த வகையான கொசு கடித்த 5 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் ஏற்படுகிறது. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்து 2, 3 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையிலும் இவை கடிக்கும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களில் ஏடியஸ் கொசுக்கள் பெருகி வருகின்றன. ஆனால் இப்போதே கொசுக்களின் தொல்லையோடு சேர்ந்து டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.

சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன. நிலவேம்பு கசாயத்தை தினமும் காலை, மாலை 30மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸால் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும். இதனால் அம்மா உணவகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில வேம்பு கசாயம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பரவாமல் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது இதுபற்றி தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டெங்குவை ஒழிக்க 26 ஆயிரம் பணியாளர்கள், 3 ஆயிரத்து 500 பூச்சி இன வல்லுனர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இப்போது டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்று தெரிவித்துள்ளார்.

போலீஸ் வீட்டில் ஒழிந்துகொண்டால் நம்மை யாரும் பிடிக்க முடியாது என்று கருதும் திருடனைப்போல் அரசு மருத்துவமனைகளில் கொசுக்கள் முகாமிட்டு நோய் பாதிப்புக்காக வரும் நோயாளிகளை கடினமாக கடித்து துன்புறுத்துகிறது. இரவு நேரம் வந்தோலே போதும், கொசுக்கள் படையெடுத்து வந்து கடிக்கிறது. இதனால் சென்னை கண் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இரவில் தூக்கமின்றி தவியாய் தவிக்கின்றனர். ஏற்கனவே உடல் நலபாதிப்பு குன்றி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு டெங்கு இலவசம் என்பதுபோல் உள்ளது இந்த கொசுக்கடி. மற்ற இடங்களில் கொசுக்களை ஒழிப்போம் என்று கூறும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனைகளில் முகாமிட்டு, நோயாளிகளை கடித்து துன்புறுத்துவதுடன், நோய் பரப்பும் செயலை தடுக்க முன்வருவார்களா…?