Home தமிழகம் ஏரி,குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 72 வீடுகள் அகற்றப்பட்டன வருவாய்த் துறை நடவடிக்கை

ஏரி,குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 72 வீடுகள் அகற்றப்பட்டன வருவாய்த் துறை நடவடிக்கை

15
0
SHARE

பொன்னேரி, டிச. 10&

வேண்பாக்கம் கிராமத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய 72 வீடுகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்து ஆக்கிரமிப்பை வருவாய் துறையினர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்டது வேண்பாக்கம் கிராமம். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் வேண்பாக்கம் ஏரி குளம் மேய்க்கால் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனால், நீர்வரத்து பகுதியால் ஏரி, குளங்கள் மழைக்காலங்களில் நிரம்பாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வளர்ந்து வரும் பொன்னேரி பகுதியில் மேலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதனை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தை சார்ந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை, பொதுப்பணி துறையினருக்கு புகார் செய்த நிலையில் நடவடிக்கை காலதாமதமானதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகி நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்களை அகற்ற வருவாய் துறை, பொதுப்பணி துறை, பொன்னேரி பேரூராட்சி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய அரசு அதிகாரிகளுக்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது ஏரி, குளம், மேய்க்கால் ஆகிய நீர்நிலைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின் படியும் வேண்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 72 வீடுகளை அகற்ற கலெக்டர் உத்திரவிட்டார். இதனையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் தாசில்தார் சுமதி, துணை தாசில்தார் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், பொறியாளர்கள் ஜெயகுரு, பாலு, பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 72 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்றும் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தால் பாதிக்கப்படும் 72 குடும்பத்தினருக்கும் இதேபகுதியில் காலியாக உள்ள 1 ஏக்கர் 50 சென்ட் நிலத்தில் தலா 600 சதுர அடியாக வீட்டுமனை வழங்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படிநேற்றுவேண்பாக்கம்பகுதியில்நீர்நிலைபகுதியில்உள்ள 72 வீடுகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமலிருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த வழியாக செல்வோரை விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி கூறுகையில், ஏரி, குளம் ஆகிய பகுதிகளால் நீர்வழி தடம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பால் வீடு கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்றதில் ஆக்கிரமிப்பு அகற்ற அரசு அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் சுந்தரவல்லி ஆக்கிரமிப்பு பகுதியில் பலமுறை நேரில் வந்து ஆய்வு செய்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டதன் பேரில் நேற்று 72 வீடுகள் பொக்லைன் இயந்திரத்தின்மூலம் அகற்றப்பட்டு வருவதாகவும், ஆக்கிரப்பாளருக்கு மாற்று இடம் இதேபகுதியில் தலா 600 சதுர அடி வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது தாசில்தார் சுமதி,  துணை தாசில்தார் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடபட பலர் உடனிருந்தனர். இதனால் வேண்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.