Home மற்றவை தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல் ராஜா விளக்கம்

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல் ராஜா விளக்கம்

27
0
SHARE

சென்னை, டிச.7&

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து ஞானவேல் ராஜா விளக்கம் அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:&

கடந்த எட்டு மாத காலத்தில், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதுபோன்று தயாரிப்பாளர் சங்கம் ஆரோக்கியமான பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு காரணத்தினால் 8 பேர் ஏன் அப்படியரு முடிவு எடுத்தார்கள் என்று தெரியாமல், உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது மனதிற்கு வருத்தமளிக்கிறது.

ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்த போது, பொருளாளர் பிரபுவும், கதிரேசன் அவர்களும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கக்கூடியதாக இருந்தது.

கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த 8 மாதங்களில் பல நல்ல விசயங்கள் நடைபெற்று வருகின்றன. இவர்களை ஒரு சிறிய கூட்டம் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகிறது. இவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் நடைபெறவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கிறது. இது எனக்கு வருத்தமளிக்கிறது.

இன்னும் 4 நாட்களில் பொதுக்குழு கூடவிருக்கிறது. அனைவரும் பொதுக்குழுவை கூட்டச் சொல்லித்தான் கேட்பார்கள். ஆனால் இவர்கள் பொதுக்குழு கூட நான்கு நாட்கள் இருக்கும் போது இப்படி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவசியமற்ற ஒரு நடவடிக்கை. எந்த தயாரிப்பாளருக்கு என்ன குறையிருந்தாலும் அதைச் சொல்லக்கூடிய சூழல் இருக்கும் போது,இவர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தவறானது.

இந்நிலையில் நான் ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன். அசோக்குமாரின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம். அவருடன் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நெருங்கி பழகியிருக்கிறோம்.அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியரு முடிவு எடுப்பதற்கு ஏதோ ஒரு சில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது.அதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். பாகுபலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கும்கி போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும்  சோதனையும், வேதனையும் தெரியும்.இதன் காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.