Home விளையாட்டு சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு? கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்பு

சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு? கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்பு

7
0
SHARE

லண்டன், ஜூன் 18 & சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள இந்தியாபாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன் கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாகப் போராடும். எனினும் தற்போதைய நிலையில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்துத் துறைகளிலும் வலுவாக இருக்கிறது. எனவே இந்திய அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஹித் சர்மாஷிகர் தவன் ஜோடி தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி வருகிறது. இந்த ஜோடி கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்தித் தருகிறது. இறுதிப் போட்டியில் ரோஹித், ஷிகர் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடினால் அது இந்திய அணிக்குப் பெரும் பலத்தை அளிக்கும். மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய கோலி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மிடில் ஆர்டரில் யுவ்ராஜ், தோனி, ஜாதவ் ஆகிய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது இன்றைய போட்டிக்குப் பலவீனமாக அமையுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். இருப்பினும் அனைத்து வீரர்களும் வலைப்பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்  என கோலி கூறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். சுழற்பந்துவீச்சில் ஜாதவ் இன்றைய போட்டியிலும் உதவுவார் என்று கணிக்கப்படுகிறது. அஸ்வின், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். வங்கதேசத்தை 9 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கோலி, ‘உண்மையை சொல்வதானால், அதுபோன்று எதையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு போட்டியில் களமிறங்குகிறபோது, நீங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், அதில் சதமடித்தாலோ அல்லது உங்கள் அணி வெற்றி பெற்றாலோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால் சில நேரங்களில் நீங்கள் டக் அவுட்டானாலும்கூட, அந்த ஆட்டத்தில் அணி வெற்றி பெறும்போது உங்களுக்குள் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். இப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அழகு என்றார்.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில், இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான அருமையான வெற்றிகளின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியில் அசார் அலி, ஃபஹார் ஜமான் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.  பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று கவலைக்குரியதாக உள்ளது. எனினும் பாகிஸ்தான் வலுவான பந்துவீச்சைக் கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஆமிர், ஜுனைத் கான் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரையிறுதியில் அசத்திய ஹசன் அலி இப்போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தி அணிக்கு உதவுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்துப் பேசிய கோலி, ‘பாகிஸ்தானின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவர்கள் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இறுதி ஆட்டத்துக்கு முன்னேற வேண்டுமானால், அதற்கு நன்றாக விளையாட வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் அபாரமாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்என்றார்.

ஐசிசி 50 ஓவர் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவது இரு நாட்டு ரசிகர்களிடையேயும் அதிக ஆர்வத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டத்தில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. எக்பாஸ்டனில் நடைபெற்ற இந்த ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் றெ வற்றி பெறுவது என்பது இரு அணிகளுக்குமே கௌரவ பிரச்னையாகும். இந்நிலையில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா. ஐசிசி போட்டிகளில் இந்தியாவுடன் தொடர்ந்து தோல்விகளைப் பெற்றுவருகிறது பாகிஸ்தான் அணி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மட்டும்தான் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன. மற்றபடி உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here