Home சம்பவம் போர்க்களமான போயஸ் தோட்டம் ஜெ. தீபா மீது தாக்குதல், ஆதரவாளர்களுக்கும் அடி உதை தீபக்...

போர்க்களமான போயஸ் தோட்டம் ஜெ. தீபா மீது தாக்குதல், ஆதரவாளர்களுக்கும் அடி உதை தீபக் சசிகலா ஆட்கள் மீது புகார் 

11
0
SHARE

சென்னை, ஜூன், 12& ஜெயலலிதா வீட்டிற்கு , ஜெ. தீபா திடீரென சென்றதால், அங்கு மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு, போயஸ் தோட்டம் , போர்க்களமாக காட்சியளித்தது. அங்கு, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதால், போராட்டமும் நடைபெற்றது. மேலும் , தன்னை கொல்ல சதி நடந்ததாக,  தீபக் மற்றும் சசிகலா ஆட்கள் மீது தீபா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு  பிறகு,  அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். பின்னர் கட்சியை தன்னுடைய தலைமையில் வழி நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வின் தொண்டர்கள் பலர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவிற்கு அழைப்பு விடுத்தனர். தீபாவும் , தொண்டர்களின் அழைப்பை ஏற்று, .எம்.ஜி.ஆர். . அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு தீபாவை கேட்டுக்கொண்டார். ஆனால், தீபா தொடர்ந்து கட்சியை வளர்த்து வருகிறார். சமீபகாலமாக அவரின் அறிக்கை, டி.டி.வி. தினகரனை கடுமையாக விமர்சித்தது.

மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இடம் நினைவு இல்லமாக மாற்றம் வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோர் தான் சட்டப்படி வாரிசும் என்று கூறப்பட்டது.  இந்த நிலையில், சசிகலா போயஸ் கார்டனில் தொடர்ந்து வசித்து வந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,  பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் யாரும் வசிக்க தயங்கினர். இதனால் ஆள் இல்லாத வீடாக அது மாறியது.

இதனால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட  போயஸ் கார்டன் தற்போது களை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் தனியார் பாதுகாவலர்களே பணியில் உள்ளனர். வீட்டில் யாரும் வசிக்காத நிலையில் ஒரு சில பணியாளர்களே அங்கு உள்ளனர்.

இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லமும் சிக்கியுள்ளது. இதனால் அது முடக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சசிகலா சிறை சென்ற பின்னர் கடந்த 5 மாதங்களாக போயஸ் கார்டன் இல்லம் கேட்பாரற்ற நிலையிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று  தீபா தனது சகோதரர் தீபக்குடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு திடீரென சென்றார். காலை 10 மணியளவில் தனது காரில் சென்று இறங்கிய தீபா நேராக ஜெயலலிதாவின் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

ஜெயலலிதாவின் வீட்டில் பிரமாண்டமான இரும்பு கேட் போட பட்டிருக்கும். அதன் வழியாக தீபா வீட்டிற்குள் சென்றார். ஆனால் அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் தீபா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த  தகவல் கிடைத்ததும் சிறிது நேரத்தில் தீபக்கும் அங்கே விரைந்து சென்றார். அவரையும் தனியார் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் தீபக்கும், தீபாவும் ஜெயலலிதாவின் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் கார்டனுக்கு விரைந்தார். அவரும் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மாதவன் தீபா இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

3 பேரும் ஜெயலலிதாவின் வீட்டு வாசலிலேயே அமர்ந்தனர். தீபா தனது குடும்பத்தினருடன் போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும்  தகவல் கிடைத்ததும்,  அங்கு ஏராளமான உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தடையை தாண்டி சென்ற தனியார் தொகைக்காட்சி நிருபர் மற்றும் கேமரா மேன் ஆகியோர் தனியார் பாதுகாவலர்களால் தாக்கப்பட்டனர். இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது, இதற்கிடையில், தீபாவுடன், தனியார் தொலைக்காட்சி நிருபர் கேமிராமேனுடன் சென்றுள்ளார். அவர்களும், தீபாவுடன், ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

அங்கு இருந்த , சபாரிப்போட்ட தனியார் பாதுகாவலர்கள், தனியார் தொலைக்காட்சி நிருபர், கேமிரா மேன் மீது கடும் தாக்குதல் நடத்தினர். மேலும், மைக்கை பிடுங்கி, நிருபர் தலையில் தாக்கினர். அவர்கள் அங்கிருந்து நிலைகுலைந்து ஓடி வந்துள்ளனர்.

அங்கு, தீபா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், தீபாவின் ஆதரவாளர்கள்  போயஸ் கார்டன் முன்பு ஒன்று கூடி, கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு மேலும் பதட்டம் தொற்றிக்கொண்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் , தீபா மற்றும் கணவர் மாதவனை பத்திரமாக அழைத்து வந்தனர். தனியார் தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பு கருவிகள், செல்போன்கள் பிடுங்கப்பட்டது. அதை போலீசார் பத்திரமாக மீட்டு கொடுத்தனர்.

தீபாவின் ஆதரவாளர் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.  உயர் போலீஸ் அதிகாரி முன்பே இந்த சம்பவம் நடந்தது. பின்னர், அந்த உயர் போலீஸ் அதிகாரி, தனியார் பாதுகாவலரை கழுத்தை பிடித்து தள்ளி கடும் எச்சரிக்கை விடுத்தார்.  இந்த சம்பவத்தால், போயஸ் கார்டனே அடி தடியாகி, போர்க்களமானது.

செய்தியாளர்களிடமும், போலீசார் கடுமையாக நடந்துக்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து போயஸ் கார்டனில், போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, தீபக் திட்டமிட்டு அழைத்து, போயஸ் கார்டனில் வைத்து தன்னை கொல்ல சதி திட்டம் நடந்தியதாக தீபா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here