Home விளையாட்டு சாம்பியன்ஸ் டிராபி இந்தியா & தென் ஆப்ரிக்கா இன்று மோதல் அரையிறுதிக்கு ...

சாம்பியன்ஸ் டிராபி இந்தியா & தென் ஆப்ரிக்கா இன்று மோதல் அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்?

9
0
SHARE

லண்டன், ஜூன் 11& லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது இலங்கை. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆடிய இலங்கை அணியில் குணதிலகா 76, குஷல் மென்டிஸ் 89 ரன்கள் குவிக்க, அந்த அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் தோற்றதால், இன்று நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நடப்பு சாம்பியனான இந்தியா.

அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா, பாண்டியா ஆகிய இருவரும் ரன்களை வாரி வழங்கினார்கள். உமேஷ் யாதவ் பந்துவீச்சும் மோசமாக அமைந்தது.இந்த நெருக்கடியான நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் முறையாக பெரிய போட்டியில் தலைமை வகிக்கிறார். எனவே அவருக்கு இந்தத் தொடர் முக்கியமான ஒன்றாகும். அதனால் இதில் வெல்வதற்கு அவர் மிகவும் தீவிரம் காட்டுகிறார். இலங்கையுடனான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியதாவது: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு கட்டத்தில் நாங்கள் போதிய அளவு ரன் குவித்துவிட்டதாக நினைத்தேன். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அபாரமாக ஆடினர். அதனால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அதேநேரத்தில் நாங்கள், எதிரணியால் வீழ்த்த முடியாத அணியல்ல என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டும் வலுவாக இருந்தன. ஆனால் அடுத்தப் போட்டியில் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ரோஹித் சர்மா& ஷிகர் தவன் ஜோடி தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி வருகிறது. இந்த ஜோடி கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்தித் தருகிறது. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவனின் சதத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரால் கடந்த போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இலங்கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டார்கள். தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சைச் சமாளிக்கத் தடுமாறும் என்பதால் இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் ஷமிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற ஆவல் பலருக்கும் உள்ளது. உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஷமி இடம்பெறக்கூடும்.

ஜடேஜா,பாண்டியா,ஜாதவ் ஆகிய இந்த மூன்று பேரிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். ஜாதவின் வாய்ப்பு பறிபோகவே அதிக வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் மோர்னே மார்கல்,மில்லர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். டிவில்லியர்ஸ் இரு போட்டிகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிராக அவருடைய பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறது தெ.ஆ.அணி.இன்று நடைபெறும் போட்டி மிகவும் கடுமையான சவாலாக இருக்கும் என்பதால் இந்திய ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here