Home தமிழகம் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள்...

கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து  11ம் வகுப்பு பாடத்திலிருந்து வினாக்கள்

19
0
SHARE

சென்னை, மே.8& அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் எனப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மாணவர்கள் கடும் கட்டுப்பாட்டிற்கு இடையே எழுதினர். அவர்கள் தேர்விற்கான வினாத்தாள் கடினமாக இருந்தாக தெரிவித்தனர்.

அகில இந்திய மருத்துவக் கல்வி கழகத்தின் சட்டத்தின்படி தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2017 மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கவுன்சில் அனுமதிப் பெற்ற நிறுவனங்களில் சேர்வதற்கு  நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி முதல்  மார்ச் 1 ம் தேதி வரை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வினை எழுதுவதற்கு  விண்ணப்பித்தனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி,நாமக்கல், திருநெல்வேலி, வேலூர்  ஆகிய 8 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 103 நகரங்களில் 2,200 கல்வி நிறுவனங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு இளநிலை மருத்துவப்படிப்பிற்கு நீட் 2017 தேர்வினை எழுதுவதற்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில் சென்னையில் இருந்து சுமார் 38,000 மாணவர்களும் தமிழக அளவில் சுமார் 99,000 மாணவர்களும் நீட் தேர்வினை எழுதியதாக தெரிகிறது.

இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு   ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டன. மேலும் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் மற்றும் கையப்பம் சரியாக இல்லாத மாணவர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டினை எடுத்து வர வேண்டும் என்ற விதியின் படி எடுத்து வந்தனர். மேலும் தங்களின் ஹால் டிக்கெட்டுடன் ஒட்டுவதற்கான போஸ்ட் கார்டு சைஸ் புகைப்படத்தினையும் எடுத்து வந்தனர்.பெரும்பாலான மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்வு மையங்கள் மிகவும் தொலைவாக இருந்ததால் அவர்கள் தேர்வு மையங்கள் அமைந்துள்ள நகரங்களுக்கு முதல்நாள் இரவே தங்களின் பெற்றோர்களுடன் வந்து தங்கினார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் அமைந்திருந்தன. சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிவாக கணக்கிடப்படும்.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், கால்குலேட்டர், செல்போன், பேஜர், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி,  சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும்.   சாதாரண வகை பேண்ட், அரைக்கைசட்டை போன்ற ஆடைகளை மட்டும் அணிய வேண்டும் என கூறினர். இத்தகைய கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முழுக்கை சட்டை அணிந்து இருந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு முன்னதாக தங்களுடைய சட்டையை வெட்டிய காட்சியையும் பார்க்க முடிந்தது. மாணவிகள் பதற்றத்தில் தாங்கள் அணிந்து இருந்த ஆபரணங்களை கழட்டி உறவினர்களிடம் கொடுத்தனர்.    

மேலும் தேர்வு மையத்திற்கு காலை 7.30 மணிக்கு பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்கள் ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய படிவம் மட்டுமே உள்ளே எடுத்துச்  செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்திருந்தால் அதனை மாற்றச் சொல்லி மாற்றிப்பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். அதேபோல் மின்சாதனப்பொருட்கள், விலையுயர்ந்த பொருட்கள் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் தேர்வு எழுதுவதற்கான பென் சிபிஎஸ்இ தேர்வு மேற்பார்வையாளர்களால் வழங்கப்பட்டன.  ஹால்டிக்கெட் காலை 7.30 மணி முதல் 9.30  மணி வரை  வந்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்   காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.   இவர்களுக்கான எழுத்துத் தேர்வு   முடிவுகள் ஜூன் மாதம் 8 ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்த பின்னர் வெளியில் வந்த மாணவர்கள் கூறும்போது, நீட் தேர்விற்கான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டாலும், வேதியியல், இயற்பியல் தேர்வு வினாக்கள் மட்டுமே கடினமாக இருந்தது. பெரும்பாலும் மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும், 11ம் வகுப்பில் படித்த பாடங்களில் உள்ள வாய்பாடு, செயல்முறைகள் போன்றவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது. மேலும் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்டிருந்தனர். தாவரவியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக அமைந்திருந்தன. வினாகள் சிந்தித்தும், பயன்பாடுகளை பயன்படுத்தியும் எழுதும் வகையில் அமைந்திருந்தன என்றனர்.

மேலும் சில மாணவர்கள் கூறும்போது, பெரும்பாலும் மாநில பாடத்திட்டத்தில் நடைபெறும் பள்ளிகளில் 11 ம் வகுப்பில் முழு பாடத்தினையும் நடத்தாமல், 12ம் வகுப்பிற்கான பாடத்தினை நடத்தினர். இதனால் 12 ம் வகுப்பு பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடிந்தது. 11 ம் வகுப்பு பாடப்புத்தக்கத்திற்கான வினாகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இதற்காக சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் சென்றுள்ளோம் என கூறினர்.