Home அரசியல் டிடிவி தினகரனை ஒதுக்கிய விவகாரம் ‘எந்த நாடகமும் இல்லை’ முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

டிடிவி தினகரனை ஒதுக்கிய விவகாரம் ‘எந்த நாடகமும் இல்லை’ முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

24
0
SHARE

சென்னை, ஏப். 21& டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்தலில் எந்த வித நாடகமும் இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு

பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் (அதிமுக அம்மா) தயாராக இருக்கிறோம். அவர்கள் (ஓ.பி.எஸ். அணி) வந்தால் பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.

பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சில கருத்துகளைக் கூறியுள்ளார். எங்களது ஒரே குறிக்கோள் எண்ணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும். கட்சியின் சின்னமான இரட்டை இலை திரும்பப் பெற வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து ஒன்றுபட்டு நல்லாட்சியைக் கொடுக்க வேண்டும் என்பது தான். அதற்காக, ஒன்றுபட்டு செயல்பட பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மரணத்தின் போது ஓ.பி.எஸ்., முதல்வராக இருந்தார். அவர் நினைத்தால் விசாரணை ஆணையம் அமைத்திருக்கலாம். மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. எங்களது ஒரே நோக்கம், சிந்தனை ஒன்றுபட்டு ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இழந்த இரட்டை இலையை மீட்டு ஒரு வலுவான இயக்கமாக நான்கு வருடம் தொடர்ந்து ஒரு நல்லாட்சி தருவதற்கு நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம். நாங்கள் நிபந்தனைகள் விதிக்கவில்லை. அவர்கள்தான் நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

அதைக்கூட பொருட்படுத்தவில்லை. மகிழ்ச்சியாக இரண்டு பேரும் ஒற்றுமையாக இருந்து உட்கார்ந்து பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்ததில், எந்த நாடகமும் இல்லை. நாங்கள் அவரிடம் விலகும்படி வற்புறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து கட்சியின் நலனைப் பார்த்துச் செயல்பட வேண்டும். நிபந்தனைகள் என்பது உட்கார்ந்து பேசும் போதுதான் தெரியும். பத்திரிகைகள், செய்திகள் வாயிலாகத் தெரிவிக்கும் போது அது எங்களுக்குத் தெரியாது. இரட்டை இலை சின்னத்தை முடக்க வழக்குப் போட்டவர்கள், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் தான்.

புதிய பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது. காரணம், அதுதொடர்பான பிரச்னை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அந்தப் பிரச்னை ஆணையத்தில் பைசல் செய்யப்பட்டவுடன் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.