Home தமிழகம் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு  மத்திய அமைச்சர்கள் விழாவில் எம்.பி.க்கு எதிராக பாஜகவினர் கோஷம்  

ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு  மத்திய அமைச்சர்கள் விழாவில் எம்.பி.க்கு எதிராக பாஜகவினர் கோஷம்  

89
0
SHARE

திருச்சி,மார்ச் 12&  திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலைய வளாகத்தில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மற்றும் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பணிகள் குறித்து விழாவில் பேசினர்.  இந்நிலையில்  திருச்சி சிவா எம்.பி. விழாவிற்கு தாமதமாக வந்தார். அப்போது ரயில்வே அமைச்சர் பேசி கொண்டிருந்தார். பின் சிவா எம்.பி.யை பேசுமாறு அழைத்தனர்.பின் சிவா எம்.பி. பேச துவங்கியதும் தான் வந்த விமானம் தாமதமாக வந்ததால்தான் விழா மேடைக்கு தாமதமாக வந்ததாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.  பின் அவர் பேச்சை தொடரும் போது நான் தமிழில் பேசினால் அமைச்சருக்கு புரியாது.எனவே ஆங்கிலத்தில் பேசுகிறேன்.அப்போதுதான் நான் வைக்கின்ற கோரிக்கைகள் அவருக்கு முழுமையாக சென்றடையும் எனக்கூறி பேசினார். அப்போது தற்போது திருச்சியிலிருந்து செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை திருவனந்தபுரம் வரை நீட்டித்துள்ளீர்கள். அது மகிழ்ச்சியான செய்திதான், ஆனால் அந்த ரயிலை மணப்பாறையில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிறைய ரெயில்கள் இயக்க வேண்டும். திருச்சி ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும், மேலும் என்னுடைய எம்.பி. நிதியிலிருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒரு கோடி செலவில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது.அது தற்போது பழுதாகி உள்ளது அதை நிர்வாகம் பராமரிக்காததால்தான் பழுதாகி விட்டது என பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது மேடை எதிரில் இருந்த பா.ஜ.க. வினர் தமிழில் பேசுங்கள் என கூச்சல் இட்டனர்.இதை பார்த்த சிவா எம்.பி. எனக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். ஆனால் மத்திய அமைச்சருக்கு ஆங்கிலத்தில் பேசினால்தான் கருத்துக்கள் கோரிக்கைகள் எளிதாக சென்றடையும் எனக் கூறினார்.மேலும் இந்த விஷயத்தை திசை திருப்ப வேண்டாம் எனவும் கூறினார்.  அப்பொழுது ரயில்வே அமைச்சரில் அருகில் இருந்த மாநில அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புரோட்டகால் படி சீக்கிரம் பேசி முடியுங்கள் என கூறினார்.இதையடுத்து சிவா எம்.பி. க்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மத்திய அமைச்சர்கள் இருவர் மேடையில் இருக்கும் போதே ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பின் மக்களின் பிரச்னையைதான் பேசுகின்றேன். இதை அரசியல் ஆக்காதீர்கள் என சிவா எம்.பி. பேசி முடித்தார்.  இந்நிலையில் விழா முடிந்து வெளியே வந்தபோது சிவா எம்.பி. அருகில் வந்த பா.ஜ.க.வினர் தமிழகத்தில் தமிழில் பேசுங்கள் என கோஷமிட்டனர்.இதை தொடர்ந்து சிவா எம்.பி. யுடன் வந்தவர்கள் இந்தி ஒழிக என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு ஒரு மோதல் நிலை உருவானது. பின்னர் போலீசார் அங்கு வந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.